சமூக ஊடகங்கள்


சமூக ஊடகங்கள் 

ஆதி மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புக் கொள்ளவும் தகவல்களை தெரிவிக்கவும் பயன்படுத்திய “பறை” ஒலியே இந்த உலகின் முதன் முதல் ஊடகமாகும். பின்பு புறாவில் தூது, ஒற்றர்கள் மூலம் செய்தி, அஞ்சல் மூலம் தகவல், தொலைபேசி வழி என கற்காலம் தொடங்கி கணினி காலமான இன்று வரை சமூக ஊடகத்தின் பரிணாமவளர்ச்சி பல கட்டங்களை கடந்து அசாத்திய முன்னேற்றம் பெற்றுள்ளது. அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க இயலாது வாழ்வின் அங்கமாகிவிட்டது. இந்த நிலையில் சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் தாக்கமும் வரமா ? சாபமா ? என்ற கேள்வி அனுதினமும் பேசுபொருளாகிவிட்டது. சமூக ஊடகங்களின் சாதக பாதகங்களை இக்கட்டுரையில் அலசுவோம்.
சமூக ஊடகம் என்பவை என்ன ?
மக்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து இருக்கவும், உலகில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், நமது அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்வது இந்த சமூக ஊடகங்கள். இன்று மக்களிடையே மிகப் பிரபலமான சமூக ஊடகங்களாக காணப்படுவது கூகுள், பேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஸ்கைப், யூடியுப் போன்றவையும் இன்னும் பல சமூக வலைத்தளங்கள் ஆகும். நம் நாட்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி கருணாநிதி வரை சமூக ஊடகங்களின் தாக்கத்தை நன்கு அறிந்தததனால் தங்கள் அரசியல் வியூகத்தில் இத்தகைய ஊடகங்களை தவறாமல் பயன்படுத்துகின்றனர். தங்கள் கொள்கைகளையும் கருத்துகளையும் இளைய சமூகத்திடம் புகுத்த இது போன்ற சமூக ஊடகங்களே ஆக சிறந்த வழி என்று கண்டறிந்துள்ளனர்.
சர்க்கரையால் ஈர்க்கப்படும் எறும்பாக, இளைஞர்களை ஈர்க்கும் இந்த சமூக வலைத்தளங்கள் எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறது என்பது நம் முன் மிகப் பெரிய கேள்வி.
சமூக ஊடகங்களினால் உருவாகும் பிரச்சனைகள் பல. அதிலும் தலையாயதாக கருதப்படுவது காலம் விரையம். இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டிய நேரத்தை வகை தொகையில்லாமல் வீணடிக்கின்றனர். சில பிரபலமான சமூக வலைத்தளங்களை உருவாக்கியவர்கள் அதில் செலவிடும் நேரத்தை அறிந்தோம் என்றால் நாம் செலவிடும் நேரத்தின் அருமையை உணர்வோம். “பேஸ் புக்” மார்க் சக்கர்பெர்க், 2004 – 2014 மொத்தம் வரை 15 பதிவுகள் தான் பதிந்துள்ளார். “ட்விட்டர்” ஜேக் டார்சி, சமூக நலம் மற்றும் அரசியல் பார்வை தொடர்பான விஷயங்களை மட்டுமே பதிவு செய்கிறார். “கூகுள் பிளஸ்” லாரி பேஜ், உருவாக்கிய தினத்தில் இருந்து இதுவரை 17 பதிவுகள் மட்டுமே. “இன்ஸ்டாகிராம்” கெவின் சிஸ்ட்ரோம் வெறும் 40 படங்கள் மட்டுமே பதிந்திருக்கிறார். முக்கிய வலைதளங்களின் பிரம்மாக்கள் அதில் பெரிதாக இயங்காத போது நாம் நம் பொறுப்பை உணர வேண்டும்.
அடுத்து இத்தகைய ஊடகங்களின் பாதுகாப்பு குறித்த அச்சம். படங்கள் பதிவுகள் எதை பதியும் பொழுதும், தனிப்பட்ட விபரங்களை பகிரும்போதும் குறிப்பாக பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இத்தகைய வலைதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்தும் போதிய அறிவு நமக்கு வேண்டும். சமீபத்தில் படித்த செய்தி, ஒரு பெண்மணி தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் சுற்றுலா செல்வதை அனைவரும் அறியும்படி பெருமிதத்துடனும் மகிழ்வுடனும் தன்னுடைய வலைப் பக்கத்தில் பதிந்துள்ளார். திரும்பி வரும்போது வீடு கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அந்த பதிவின் மூலம் நிகழ்ந்த துயரம் அது என பின்னர் விசாரணையில் தெரியவந்துள்ளது. எதை பகிர்வது என்பதை விட எதை பகிரக் கூடாது என்பதில் அதீத எச்சரிக்கை அவசியம்.
அடுத்து சமூக ஊடகங்களில் தரம் குறைந்த முதிர்ச்சியற்ற அவசர விமர்சனங்கள், கருத்துப் பதிவுகள். ஒபாமா தொடங்கி உள்ளூர் உலகப்பன் வரை ஈவு இறக்கம் இல்லாமல் விமர்சன கணைகள் வீசப்படுகிறது. கல்லூரி மாணவர் ஒருவரை அவரது சக மாணவர்களே தரக்குறைவாக விமர்சிக்க அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டது பெரும் துயரம். ஆரோக்கியமான விமர்சனங்கள், விவாதங்கள நிச்சயம் தேவை, ஆனால் வரம்பு மீறி ஒருவரைப் பொது தளத்தில் விமர்சிப்பது அநாகரிகமானது.
சமூக ஊடகங்கள் மனிதரின் நேரத்தை களவாடியது ஒருபுறம் என்றால் அதைக்காட்டிலும் மக்களிடையே இருந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை கொன்று வருகிறது என்பது வருந்தத்தக்க உண்மை. “தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்க பக்கத்து வீடானது. பக்கத்து வீடு அமெரிக்காவானது” என்றோ எங்கோ படித்த கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது. தேடித் தேடி வாழ்த்து அட்டைகள் வாங்கி, நேரில் சென்று, உளமார வாழ்த்தி அன்பை பகிர்ந்து கொண்ட தருணங்கள் மாறி, தன் சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு கூட வாட்ஸ் அப்பிலும், பேஸ் புக்கிலும் இன்னப் பிற சமூக ஊடகங்கள் வாயிலாக வாழ்த்துகளை ஜீவனின்றி பகிர்கின்றோம். இறந்த நண்பனுக்கு இரங்கல் செய்தியாக “May ur soul RIP (Rest In Peace)” என பதிந்து விட்டு அடுத்த வேலையை நோக்கிச் செல்லும் அவலம் அரங்கேறி வருகிறது. அந்த இறந்த நண்பரின் வீட்டிற்கு செல்லவோ, அவரின் தாய் தந்தைக்கு ஆறுதல் கூறி தேற்றவோ எண்ணம் எழாத அளவிற்கு சமூக ஊடகங்களின் தாக்கம் நீள்கிறது.
எது எப்படியோ சமூக ஊடகங்களினால் சில பல தீமைகள் இருந்தாலும் மறுக்க முடியாத பல நன்மைகளும் உண்டு. அதில் முதலாவது உலகின் அனைத்துத் துறைகளின் அறிவையும் ஒரு சேர வழங்குவது. மாத, பிதா, கூகுள், கடவுள் என்பதே இந்த நவீன யுகத்தில் விளைந்துள்ள மாற்றம். புத்தகம் கொண்டு தேடித் தேடி அறிந்த அறிவெல்லாம் இன்று கையடக்க கணினியிலும், செல்பேசியிலும் பெற்றுவிடுகின்றனர். சமூக ஊடகங்களில் பங்கேற்காவிட்டால் அறிவின் ஒரு வாசலை நாமே அடைப்பதாகும்.
மதுரையை சேர்ந்த ஒரு இளைஞர், அங்குள்ள புராதன இடங்களை சுத்தப்படுத்துவோம் கைகோருங்கள் நண்பர்களே என்று தன்னுடைய பதிவில் கோரிக்கை வைக்க, அலை அலையென கூடிய இளைஞர்கள் மதுரையை தூய்மைப்படுதியது ஆச்சர்ய ஆனந்தம். எகிப்தில் ஆட்சியாளருக்கு எதிராக கிளர்ச்சி உண்டாக்கி அரசியல் மாற்றத்துக்கு வித்திட்ட புரட்சி நிகழ்ந்தது சமூக வலைத்தளத்தில் பதிந்த ஒரு பதிவு. கல்வி உதவியா, மருத்துவ உதவியா, அவசர அடிப்படைத் தேவைகள் பலவற்றிற்கும் கை கொடுக்கிறது சமூக ஊடகங்கள்.
100 வருட சினிமா வரலாற்றின் தலை எழுத்தையும் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது சமூக ஊடகங்களின் வளர்ச்சி. ஒரு சில பேரின் அங்கீகாரம் கிடைக்காமல் வாய்ப்பு தேடி அலைந்து தவித்த திறமையுள்ள கூட்டம் தங்கள் குறும்படப் படைப்புகளை யூ டியூபில் பதிவேற்றி நேரடியாக மக்கள் மன்றத்தில் பந்தி வைத்து மிகப் பெரிய வெற்றிகளையும், சாதனைகளையும், வாய்ப்புகளையும் தங்களை தேடி வரச் செய்கின்றனர் நம் முதல் தலைமுறை இளைஞர்கள்.
எட்ட இருப்பினும் முகத்தோடு முகம் பார்த்து பேசும் அதிசயங்களையும், உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் நண்பர்கள், உறவுகளுடன் தொடர்பில் இருக்கவும், புத்தகம் கையில் எடுக்காத இளைஞர்களும் நொடிக்கு நொடி உலகின் அசைவுகளை விளங்கிக்கொள்ள செய்வது என இதன் பயன்கள் எல்லையற்றது. இத்தனை பயன்கள் இருக்கும் இத்தகைய சமூக ஊடகங்களில் நேர விரையம், பாதுகாப்பு இல்லை எனக் கூறி பயன்படுத்தாமல் இருப்பது அல்லது உங்கள் குழந்தைகளை அதில் இருந்து விலக்கி  வைப்பது பாஸ்ட் வேர்ல்ட் என்ற அவசர யுகத்தில் நிகழும் ஓட்டப் பந்தயத்தில் நடந்து சென்று வெற்றி பெற்றுவிடலாம் என நினைப்பது  போல் சாத்தியமற்றது.
சமூக ஊடகங்களின் தீமையை மட்டுமே கண்டு ஒதுங்கக் கூடாது. எந்த ஒரு புதுமையிலும் நாணயத்தின் இருபக்கம் போல நன்மை தீமை இரண்டும் சேர்ந்தே இருக்கும், பாலையும் நீரையும் பிரித்தறியும் அன்னமாக மாறுங்கள். சமூக ஊடகங்கள் வரமா ? சாபமா ? என்று கேட்டால் தீக்காய்வார் போல சமூக ஊடகத்தை பயன்படுத்தும் போது நிச்சயம் அது வரமே.
மாறக்கூடிய உயிர்கள் மட்டுமே வாழக்கூடிய தகுதி பெறும் – இது இயற்கையின் விதி.
காலம் மாறுகிறது !!

Comments

Post a Comment

Popular posts from this blog

பள்ளிக்கு வெளியே கற்றல் ,பள்ளிக்கு உள்ளே கற்றல்.

சமூக வேற்றுமையைப் புரிந்து கொள்வதில் கல்வியின் பங்கு

வளரிளம் பருவம்